தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12/01/2022) தலைமைச் செயலகத்தில், மத்திய மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் முனைவர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பல்வேறு திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.
அந்த மனுவில், "நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான அனுமதி முறையை மாற்றி அமைத்தல், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தை விரைவாக அமைத்தல், மேலும் புதிய 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு கோரிக்கை, கோயம்புத்தூரில் ஒரு புதிய எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவ கோரிக்கை, மாநில அரசு நிதி மூலம் நிறுவப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை முற்றிலும் நீக்குதல், மருத்துவ உயர் படிப்புகளில் மாநிலங்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்க கோரிக்கை, வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெற விண்ணப்பித்துள்ள மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் பயின்ற மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சிக்கான எண்ணிக்கை இடங்களை அதிகரிக்க கோரிக்கை, தேசிய நல வாழ்வு திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கை, மருத்துவ உயர் படிப்பில் வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசின் எதிர்ப்பினை தெரிவித்தல், புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ள 19 மாவட்டங்களில் மாவட்ட தலைமை மருத்துவமனை புதிதாக உருவாக்கிட நிதி ஒதுக்கீடு வழங்க கோரிக்கை" உள்ளிட்டவை அடங்கிய கோரிக்கை மனுவை முதலமைச்சர் அளித்துள்ளார்.