தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் கடந்த 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற நிலையில், ஆடுதுறை பேரூராட்சியில் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டதால் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மறைமுக தேர்தலை நடத்தக்கோரி பேரூராட்சியின் எட்டு உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், குதிரைப்பேரமும் கட்சித்தாவலும் நடக்க வாய்ப்பிருப்பதால் தாமதமின்றி போலீஸ் பாதுகாப்போடு தேர்தலை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.