திருச்சி மாநகரில் அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிகளில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். மேலும் திருச்சி ஏர்போர்ட் பகுதியில் நாளை(28.8.2022) நடைபெறும் கட்சி விழாவில் சிறப்புரையாற்ற உள்ளார். திருச்சிக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார், பெரும் அளவிலான மக்களை திரட்டி வருகிறார்.
அதேவேளையில் நாளை(28.8.2022) நடைபெற உள்ள அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர், முன்னாள் அமைச்சர் என்.ஆர் சிவபதியின் இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவுள்ளார். இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் இந்த திருமண விழாவில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுகவினர் சிலர், 'கடந்த 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தோ்தல் பிரச்சார கூட்டத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருச்சிக்கு வருகை தந்து தோ்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அரசு தலைமை கொறடாவாக இருந்த மனோகர் திருச்சி ஜி கார்னா் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த பிரச்சார கூட்டம் பெருமளவில் பேசப்பட்டது. அதுபோல் நாளை நடைபெறவிருக்கும் எடப்பாடி நிகழ்ச்சியையும் பெருமளவில் பேசு பொருளாக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது' என்கின்றனர். மேலும் கூட்டத்தை காட்ட ரூ. 200 முதல் ரூ. 500 வரை செலவிடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பேச உள்ள விழா மேடையையும், அந்த இடத்தினை அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் தங்கமணி நேற்று நேரில் பார்வையிட்டார். அவருடன் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.