ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலாளர் மௌலானா முனைவர் அன்வர் பாதுஷாஹ் உலவியு, துணைப் பொதுச்செயலாளர் மௌலானா இல்யாஸ் ரியாஜியும், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பியை இன்று சந்தித்துப் பேசினார்கள். அப்போது அவரிடம், ஒன்றிய பாஜக அரசு சுமார் 40 திருத்தங்களை முன்வைத்து தாக்கல் செய்திருக்கும், சிறுபான்மை மக்களுக்கு முற்றிலும் எதிரான ‘வக்பு சட்டத் திருத்த மசோதா - 2024’ குறித்து கலந்துரையாடினார்கள். மேலும், அவர்கள் தயாரித்து வந்திருந்த விளக்க அறிக்கையை, துரை வைகோ எம்.பியிடம் வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து, அவர்களிடம் கலந்துரையாடிய துரை வைகோ, இந்த சட்டம் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தபோதே இதை எதிர்த்து வலிமையான எதிர்ப்பை பதிவு செய்ய தான் அவைத்தலைவரிடம் அனுமதிகேட்டு மறுக்கப்பட்டதையும், தன்னோடு அனுமதி மறுக்கப்பட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூடி இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக முழக்கமிட்டதையும், அதுமட்டுமின்றி ஏன் தனக்கு வாய்ப்பளிக்கவில்லை, அரசு மேற்கொண்டிருக்கும் இத்தகைய சிறுபான்மை விரோத செயலுக்கு தங்கள் கட்சியின் சார்பில் கண்டனத்தை பதிவு செய்யும் வாய்ப்பு மறுக்கப்பட்டது ஜனநாயகமற்ற செயல் என நாடாளுமன்ற அவைத்தலைவரிடம் நேரடியாக சென்று பதிவு செய்ததையும் பகிர்ந்துகொண்டார்.
மேலும் அவர், இந்த வக்ஃப் வாரிய சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து வழியிலும் கடமையாற்றுவதாக கூறியுள்ளார். இந்த சந்திப்பில் மதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெ.சிக்கந்தர், எழும்பூர் பகுதிக் கழகச் செயலாளர் தென்றல் நிசார், துறைமுகம் பகுதிக் கழகச் செயலாளர் எம்.இ.நாசர், மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர் வி.ஏ.முகம்மது ரிலுவான் கான் உள்ளிட்டர் உடன் இருந்தனர்.