தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸின் இரட்டைப் படுகொலையால் தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில் கடலூர் மாவட்ட சிதம்பரம் நகர காவல்நிலைய சுவற்றில் எழுதப்பட்ட விழிப்புணர்வு வாசகங்களால் விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறார்கள் புகார் கொடுக்கச் செல்லும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்.
அதாவது, “பெண்கள் அணிந்து இருக்கும் அணிகலன்களைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்” என்று எழுதுவதற்குப் பதில், பெண்கள் அணிந்து இருக்கும் அணிகலன்களைப் பத்திரமாக பார்த்துக் ‘கொல்லவும்’ என்று எழுதப்பட்டிருப்பதுதான் அதிர்ச்சிக்குக் காரணம். அதுமட்டுமல்ல, “பெண்கள் தங்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க தற்காப்புக் கலை கற்றுக்கொள்ளவேண்டும்” என்பதற்குப் பதிலாக பெண்கள் தங்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க தற்காப்புக் கலை கற்றுக் “கொல்ல” வேண்டும் எழுதப்பட்டிருப்பது தமிழை இப்படியா கொல்ல வேண்டும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இப்படி, பல்வேறு எழுத்துப்பிழைகளுடன் இடம் பெற்றிருக்கின்றன சிதம்பரம் நகர காவல்நிலைய சுவற்றில் எழுதப்பட்டிருந்த விழிப்புணர்வு வாசகங்கள். புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளுடன் காவல் நிலையங்களுக்கு வருவதால் இந்தப் பிழைகளைக் கண்டுபிடித்தால் கூட போலீஸிடம் எப்படிச் சொல்வது என்று தயக்கத்துடன் கடந்து சென்றுவிடுவார்கள். ஆனால், அங்குபணிபுரியும் காவலர்கள் ஒருமுறை கூடவா சுவற்றில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று கவனிக்கவில்லை? ஏற்கனவே காவல்நிலையங்களில் அழைத்துச் செல்லும் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படுவது சர்ச்சையாகிக்கொண்டிருக்கும் சூழலில் இப்படிப்பட்ட பிழைகளைத் திருத்திவிட வேண்டுமல்லவா? என்று கேள்வி எழுப்புகிறார்கள் சிதம்பரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.
எத்தனையோ கொலைகளைக் கண்டுபிடிக்கும் சிதம்பரம் நகர காவல்நிலைய எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., எஸ்.பி உள்ளிட்ட காவல்துறையினர் காவல்நிலையத்தின் சுவற்றில் தமிழைப் படுகொலை செய்த பின்னணியைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்களா?