Skip to main content

கரோனா சோதனை முடிவின்படி தரிசன விழாவுக்கு அனுமதி... சிதம்பரம் சார் ஆட்சியர்!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

chidambaram nataraja temple

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரும் 27ஆம் தேதி தேர்த் திருவிழா மற்றும் 28 ஆம் தேதி ஆனி திருமஞ்சன தரிசனம் விழா நடத்துவதற்கு கோயில் தீட்சிதர்கள் முடிவு செய்தனர்.

 

இதனைத் தொடர்ந்து தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எளிய முறையில் கோவிலுக்குள்ளே திருவிழாவை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீட்சிதர்கள், தீட்சிதர் குடும்பத்தைச் சார்ந்தவர்களைக் கோவிலுக்கு உள்ளே அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். 

 

இதற்கு மாவட்ட நிர்வாகம் 150  தீட்சிதர்கள் மட்டுமே கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோயில் விழாவிற்குச் செல்லும் தீட்சிதர்கள் அனைவருக்கும் கரோனா டெஸ்ட் எடுத்து அதன் முடிவுபடி தான் உள்ளே அனுமதிக்கப்படும் என சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சிதம்பரம் டி.எஸ்.பி. கார்த்திகேயன், நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் சண்முகம், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் முருகேசன், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். சார் ஆட்சியரின் முடிவை ஏற்று கரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ள தீட்சிதர்கள் முடிவு செய்துள்ளனர்.

 

மேலும் திருவிழாவின்போது கோயில் உள்பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்திற்குச் சாமி வந்தால் அதனைக் கோயிலுக்கு வெளியே உள்ள வீடுகளின் மாடிகளில் ஏறி பொதுமக்கள் பலர் பார்க்க நேரிடும் இதனால் கூட்ட நெரிசல் ஏற்படும் சூழல் உண்டாகும். இதனைத் தவிர்க்க சிதம்பரம் நகர காவல்துறை சார்பில் ஆயிரங்கால் மண்டபத்திற்குச் சாமி வரும் வழியில் இருபுறங்களிலும் பச்சைத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாமி உள்ளே இருப்பது வெளியே தெரியாது எனக் காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.
 

 

சார்ந்த செய்திகள்