கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பின்னல்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோவிந்தன் - குமாரி தம்பதி. இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வேப்பூர் அருகில் உள்ள மேலக்குறிச்சி கிராமத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளனர். அதன் பின்னர் மீண்டும் தங்களது ஊருக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அருகில் உள்ள ஐவதுகுடி மேம்பாலத்தில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது அவர்களுக்குப் பின்னால் இருசக்கர வாகனத்தில் முகத்தை மூடிக்கொண்டு வந்த வாலிபர் ஒருவர், திடீரென குமாரி கழுத்தில் கிடந்த நகையைப் பறித்துகொண்டு பறந்து சென்றார். அதனால் அதிர்ச்சியடைந்த குமாரியும் அவரது கணவரும் இதுகுறித்து வேப்பூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். அவர்கள் புகார் மீது வழக்குப் பதிவுசெய்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவந்தனர். இந்நிலையில், வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் உள்ளிட்ட போலீசார் நேற்று (12.12.2021) மாலை 6 மணியளவில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவர் அந்த வழியாக வரும்போது அவரை மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள அஜித் நகரைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் பிரபு (24) என்பது தெரியவந்தது. அதேபோல், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது நகை பறித்தது, விழுப்புரத்தில் ஒரு பெண்ணிடம் இதேபோன்று நகையைப் பறித்துச் சென்றது, சென்னை பீர்க்கன்காரணை பகுதியில் ஷோரூமில் மோட்டார் சைக்கிளைத் திருடியதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பிரபு என்கிற அந்த பிரபாகரன் தனியாக செல்லும் பெண்களைக் குறிவைத்து அவர்கள் கழுத்திலிருந்து நகைகளைப் பறித்துச் செல்வதில் கைதேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவுசெய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.