கடந்த 21/05/2020 அன்று, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வாங்கல் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (32 வயது). இவர் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 8 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தல் செய்து தவறாக நடக்க முயற்சித்ததாகப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கோபி அப்பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் சுரேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் காவல் ஆய்வாளர் இந்திராணி சோபியா இந்தப் புகார் மீது புலன்விசாரணை செய்தார். அதைத் தொடர்ந்து, ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு தொடர்பான அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று (24/03/2021) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கில் நீதிபதி ஆர்.மாலதி இன்று (24/03/2021) தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமி மீதான துன்புறுத்தல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே குற்றவாளியான சுரேஷ்குமாருக்கு 25 வருட கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 7,000 அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார்.
பெண் குழந்தைகள் மீதான துன்புறுத்தலுக்கு இதுபோன்ற கடுமையான தண்டனை வேண்டும் என ஈரோடு நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பைச் சுட்டிக்காட்டுகின்றனர் வழக்கறிஞர்கள்.