சேலம் மத்திய சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் அடிக்கடி பறிமுதல் செய்யப்பட்டு வந்தது. கடந்த இரண்டுமுறை மாநகர காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனைகளின்போது எந்த வித தடை செய்யப்பட்ட பொருள்களும் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில், டவர் பிளாக் கட்டடத்தின், இரண்டாவது தொகுதியில் உள்ள கழிப்பறை அருகே, செல்போன் கிடப்பதாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) இரவு 11 மணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சிறைக்காவலர்கள் ராஜா, கண்ணன், மணிகண்டன் ஆகியோர் குறிப்பிட்ட பகுதியில் சோதனை செய்தபோது, கழிப்பறை அருகே மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கருப்பு நிற நோக்கியா செல்போனை கைப்பற்றினர். பேட்டரியுடன் இருந்தது. ஆனால், அந்த செல்போனில் சிம் கார்டு ஏதும் இல்லை. கைதிகள் யாரோ ரகசியமாக பேசிவிட்டு, அங்கே புதைத்து வைத்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து சிறைத்துறை நிர்வாகம் சார்பில், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.