வீட்டுத் தோட்டங்களில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்ப்பது தொடர்பாகவும், வனத்தை ஒட்டி பகுதியில் உள்ள தோட்டங்களில் கஞ்சா செடிகள் சட்டவிரோதமாக வளர்ப்பது தொடர்பாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகும். ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக திருப்பூரில் கோழிப்பண்ணையில் இருவர் கஞ்சா செடிகளை வளர்த்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தொட்டியந்துறை பகுதியில் தாரிக் முண்டால், அனுப் சர்தார் ஆகிய இரண்டு வடமாநில இளைஞர்கள் கோழிப்பண்ணை ஒன்றில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த கோழி பண்ணையில் கஞ்சா செடி வளர்க்கப்படுவது மற்றும் விற்பனை செய்யப்படுவது குறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணையில் விசாரணை ஆய்வு நடத்தி சோதனை செய்த பொழுது அங்கு கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தாரிக் முண்டால் மற்றும் அனுப் சர்தார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டதோடு அந்த கோழிப்பண்ணையின் உரிமையாளிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.