தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சிதம்பரம் அருகிலுள்ள பு.முட்லூர் கிராமத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தேசிய குடியுரிமை சட்டம் என்பது இந்திய மக்களின் குடி கெடுக்கிற சட்டம். இந்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய மக்கள் அமைதி வழியில் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்லாமியர்களை இந்த தேசத்தின் குடிமக்கள் அவர்களைத் தனிமைப்படுத்த கூடாது. தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 1971- ம் ஆண்டுக்கு முன்பு பிறந்த ஆவணங்களைக் கேட்டால் தந்தைக்கு ஆவணம் இருக்காது, மகனுக்கு ஆவணம் இருக்கும்.
அப்போ தந்தைக்கு ஆவணம் இல்லை என்றால் அவர் முகாமிலும் மகன் வீட்டிலேயும் வசிக்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் பிரதமர் மோடிக்கு பிறந்த சான்று இருக்காது அவரது தாய்க்கும் இருக்காது. சாதாரண ஏழைமக்கள் எவ்வாறு பிறந்த சான்று வைத்திருக்க முடியும் எனக் கேட்டார்.
1947 முன்பு சொத்து பத்திரம் கேட்கிறார்கள் சொத்து இல்லாமல் மீனவர்களும் பழங்குடி மக்களும் வாடகை வீட்டில் இருப்பவர்களும் எவ்வாறு சொத்து பத்திரங்களை காண்பிக்க முடியும். சொத்து பத்திரங்கள் இல்லாதவர்களைக் கடலில் கொண்டுபோய் கொட்டவா முடியும். எனவேதான் இந்தக் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கிறோம் என்ற அவர் தேசிய குடியுரிமை சட்டத்தின் படி அண்டை நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமியர்களை மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும். அங்கு பாதுகாப்பு இல்லை என்பதால்தானே இந்தியாவை தேடி வருகிறார்கள். மேலும் தேசிய குடியுரிமை சட்டம் சம்பந்தமாக ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என மோடி கூறி வருகிறார் போராடும் மக்களாகிய நாங்களும் ஒரு அடிகூட பின்வாங்கப் போவது இல்லை.
இந்தியாவில் பெரிய மாநிலங்களிலேயே இந்த குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என முதலமைச்சர்கள் அறிவிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி அரசு இந்தக் கருப்பு சட்டத்தை அமல்படுத்துவோம் எனக் கூறுகிறார்கள். இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பரவி விட்டதாகவும், அதற்கு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பேசும் அரசு கரோனாவை விட மோசமானது குடியுரிமை சட்டம்" என்றார்.
முதல்வர் பழனிசாமிக்கே பிறந்த சான்று இருக்காது. அதேபோல் பாராளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்ட பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நான் ஒரு குல்லா போடாத இஸ்லாமியர் என அந்த மக்களை ஏமாற்றி இரட்டை வேடம் போடுகிறார் எனவும் குற்றம் சாட்டினார்.
கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர் முத்துப் பெருமாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்டச் செயலாளர் முடிவண்ணன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அறவாழி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.