கடந்த 7 நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் புகுந்த காட்டு யானையான அரிசிக்கொம்பன் சில நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் யானையானது கம்பம் அருகே உள்ள சண்முகா அணைப் பகுதியில் புகுந்தது. தொடர் முயற்சியின் பலனாக ஒரு வழியாக மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானை பிடிக்கப்பட்டது. அரிசிக்கொம்பன் யானை ஒரு வழியாகப் பிடிபட்டு களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் கவனத்தை தேனி மீது குவிக்க வைத்த அரிசிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்ட உடன் மேட்டுப்பாளையத்தில் பாகுபலி என்ற யானை, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பாழ்படுத்தி வருவதால் அதை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கோடை வெப்பம் அதிகரித்துள்ள காரணத்தால் வனப் பகுதியில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவுகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் பாகுபலி என்ற யானை ஊருக்குள் புகுந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் பாகுபலி யானை பலமுறை ஊருக்குள் புகுந்துள்ளது. நெல்லிமலை மற்றும் கள்ளார் வனப்பகுதிகளில் பாகுபலி யானையின் நடமாட்டம் காணப்படும்.
இரு காடுகளுக்கும் இடையே யானை குடிபெயரும் போது ஊருக்குள் செல்வது வழக்கம். ஆனால் தற்போது வறட்சி காணப்படுவதால் உணவு தேடி விவசாய நிலத்திற்குள் யானை புகுந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாகவே பாகுபலி யானை அதிக அளவு விவசாய நிலங்களுக்குள் சுற்றி வருகிறது. தகவல் அறிந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விட முயற்சி மேற்கொண்டுள்ளனர். தொடர் முயற்சியின் காரணமாக வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இன்று அதிகாலை யானையானது குடியிருப்புகள் வழியாக கள்ளார் வனப்பகுதிக்குச் சென்றுள்ளது. இதையும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.