அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் அகில இந்திய விவசாய மாணவர் சங்கம் இணைந்து நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய வேளாண்மை மற்றும் உணவு முறையின் முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சர்வதேச அளவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசனுக்கு விவசாய மேம்பாட்டிற்காகவும் விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களுடன் வலுவான தொடர்பை ஏற்படுத்துவதில் சிறந்த பங்களிப்பு களிப்பு செய்துள்ளதைப் பாராட்டும் விதமாக “வாழ்நாள் சாதனையாளர் 2021” விருது வழங்கப்பட்டது. மேலும் " துணைவேந்தர் 100 க்கும் மேற்பட்ட முதுகலை வேளாண் வகுப்புகளுக்கு கற்பித்துள்ளார் எனவும், வேளாண் ஆராய்ச்சி மாணவர்களுக்காக ரூ 1.29 கோடி மற்றும் வேளாண் இளங்கலை முதுகலை மாணவர்களுக்காக ரூ 16.70 லட்சம் ஆராய்ச்சி திட்டத்தின் மூலம் பெற்றுத் தந்துள்ளார்.
மாணவிகளை என்.சி.சி.யில் சேர ஊக்குவித்து, என்.சி.சி.யில் மாணவிகளுக்கெனத் தனிப் பிரிவைத் தொடங்கினார். அவரது வேளாண் ஆராய்ச்சிப் பணிகள் 1,230 விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவியுள்ளது என்றும் விவசாய தொழில்நுட்ப பரிமாற்றத்தின் மூலம் 2400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைகின்றனர்" என்றும் மாநாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.