
தமிழகத்தில் மின் கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.வின் இடைக்கால தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று (27/07/2022) காலை 11.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "மக்களுக்கு நல்லது செய்வதைவிட்டு அ.தி.மு.க.வை அழிக்கப் பார்க்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தி.மு.க. அழிக்க நினைத்தபோது, எல்லாம் வீறுகொண்டு எழுந்து ஆட்சியைப் பிடித்ததே அ.தி.மு.க.வின் வரலாறு. கலைஞராலேயே அழிக்க முடியவில்லை; மு.க.ஸ்டாலினால் முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
அதைத் தொடர்ந்து, மற்ற நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்தனர். இதனிடையே, வெயில் காரணமாக, எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டது. மயக்கம் ஏற்பட்டதையடுத்து, தண்ணீர் கொடுத்து மேடையில் எடப்பாடி பழனிசாமியை கட்சியினர் அமர வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.