அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஏற்கனவே பலமுறை செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றங்களை மாறி மாறி நாடியும், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்ற குழப்பம் நீடித்தது.
அதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவில் செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி மீண்டும் காணொளி வாயிலாக செந்தில் பாலாஜி நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜிக்கான நீதிமன்றக் காவல் அக்.13 ஆம் தேதி வரை மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி மீதான வழக்கு எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு மறுவிசாரணை அக்.31 ஆம் தேதிக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், சிறை மருத்துவமனை மருத்துவர்கள், ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசெல்ல அறிவுறுத்தினர். அதன் காரணமாக தற்பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.