தொழிலதிபரிடம் 5.5 லட்சம் கொள்ளை: மர்ம நபருக்கு போலீசார் வலை
சென்னை அமைந்தகரை, நெல்சன்மாணிக்கம் சாலையில், 10 ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு தொழிலதிபரிடம் 5.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை, அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் கேம்கா (68). தொழிலதிபர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள இரும்பு தொழிற்சாலையின் அலுவலகம் சென்னை அமைந்தகரை நெல்சன்மாணிக்கம் சாலையில் உள்ளது. இங்கு தனக்கு இரும்பு கொள்முதல் செய்வதற்காக மகேஷ் கேம்கா 5.50 லட்சத்துடன் நேற்று முன்தினம் காரில் வந்துள்ளார்.
அங்கு அவருக்கு தேவையான இரும்பு கிடைக்காததால், திரும்பி செல்ல பணத்துடன் காரில் ஏறியுள்ளார். அப்போது 45 வயது மதிக்கத்தக்க ஆசாமி இவரது காரின் கதவை தட்டி, கீழே கிடக்கும் ரூபாய் நோட்டுகள் உங்களுடையதா? என்று கேட்டுள்ளார். மகேஷ் கேம்கா, ஆமாம். அது, என்னுடையதுதான் என்று கூறிவிட்டு, கீழே கிடந்த ரூபாய் நோட்டுகளை பொறுக்கி உள்ளார். அப்போது மற்றொரு ஆசாமி காரின் இடப்பக்க கதவை திறந்து பணப்பையை எடுத்துள்ளார். பின்னர், இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் மகேஷ் கேம்கா அளித்த புகாரின்படி, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.