மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய 15% மருத்துவ இடங்களில் 50% ஐ தமிழக ஓபிசி பிரிவினருக்கு தரக்கோரியும், இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தக் கோரியும் தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நாகேஷ்வர ராவ் தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இன்று (26/10/2020) தீர்ப்பளித்தது. அதில், 'இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த கோரிய தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கை நிராகரித்து, இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது' என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அந்த கடிதத்தில், ஓபிசி பிரிவுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே உறுதி செய்ய வேண்டும். மாநிலங்கள் வழங்கும் இடங்களில் இட ஒதுக்கீட்டை கமிட்டி உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாவிடில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவ மேற்படிப்பு வாய்ப்பை இழக்கின்றனர். நடப்பாண்டில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்காதது ஏமாற்றமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.