2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் சத்துணவு சமையலறையில் ஏற்பட்ட தீ, மேற்கூரையில் பற்றியதில் பள்ளிக் குழந்தைகள் 94 பேர் உயிரிழந்தனர். 13 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தத் துயர நிகழ்வின் 17ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (16.7.2021) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பள்ளி முன்பாக வைக்கப்பட்டுள்ள, குழந்தைகளின் புகைப்படங்கள் முன்பாக மலர்தூவியும், மெழுகுவர்த்திகளை ஏந்தியும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், பள்ளிமுன்பு வைக்கப்பட்டிருந்த பதாகையின் முன்பு கண்ணீர்விட்டு அழுதபடி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அங்கு அஞ்சலி செலுத்தவந்த பெற்றோர்கள் அரசுக்கு ஒரு கோரிக்கையும் வைத்தனர். “94 குழந்தைகள் இறந்து இன்றுடன் 17 வருடங்கள் ஆகின்றன. எங்கள் குழந்தைகளும் இந்நேரம் இருந்திருந்தால் திருமண வயதை எட்டியிருப்பார்கள். முதலாம் ஆண்டு நினைவஞ்சலியில் இருந்து 17ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினமான இன்றுவரை எங்களுடைய கோரிக்கை ஒன்றுதான். ஜூலை 16-ஐ ‘குழந்தைகள் பாதுகாப்பு தின’மாக அறிவிக்க வேண்டும் என்பதுதான். சென்ற அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை. இந்த அரசாவது இதற்கு ஆவன செய்ய வேண்டும். இன்னும் இரண்டு மாதத்தில் இதை அறிவிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.