கரோனா பாதிப்புக்கு மத்தியில் தடுப்பு நடவடிக்கைகளுடன் தமிழகத்தில் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (16/04/2021) தொடங்கியது. இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் செய்முறைத் தேர்வை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார். மேலும், மாணவ, மாணவிகளிடம் பள்ளியில் செய்யப்பட்டுள்ள கரோனா தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், "எளிமையாகவும், பாதுகாப்பான முறையிலும் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மைக்ரோ ஸ்கோப், கண்ணாடிக் குழல்களை உறிஞ்சி அளவுகள் எடுக்கும் செய்முறை பாடம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கரோனா பரவுவதற்கு வாய்ப்பில்லாத செய்முறை பாடங்களில் மட்டுமே செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. கண்களால் கரோனா பரவ வாய்ப்புள்ளதால் அது தொடர்பான செய்முறை பாடங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும்" என்றார்.
செய்முறைத் தேர்வின் முதல் நாளான இன்று சுமார் 2 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.