சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செவ்வாய்க் கிழமை(16.4.2024) சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பு.முட்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கி 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பொதுமக்களிடம் திருமாவளவன் பேசுகையில், “இந்தத் தேர்தலில், நரேந்திர மோடியின் நாசகரமான ஆட்சியை வீழ்த்த தளபதி மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்தியும் வியூகம் அமைத்து களமாடி வருகின்றனர். பாஜக விற்கு எதிரான வியூகம் அமைத்து, பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து இன்று வலுவான தேர்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார். காங்கிரஸுக்கு பதிலாக திமுகதான் தனது எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயே டேரா போட்டு தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். கேஸ் விலை உயர்வு மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சாதிய மோதல்கள் அதிகரிக்கவும் மோடி தான் காரணம். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேசன் கடை இருக்காது. 100-நாள் வேலைத்திட்டம் இருக்காது” எனப் பேசினார்.
இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன், திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் கதிரவன், திமுக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் விஜய் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.