சட்டப்பேரவையில் 03.07.2019 புதன்கிழமை அன்று கேள்வி நேரத்தின்போது மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி துணைக் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கூறை வீடுகள், காங்கிரிட் வீடுகளாக கட்டித் தரப்படும் என்றும், வீட்டுமனை மனைப்பட்டா இல்லாதவர்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படும் என்றும் முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்தார். அதன் தற்போதைய நிலை என்ன? என வருவாய்த் துறை அமைச்சரிடம் வினவினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், கஜாபுயல் பாதித்த பகுதிகளில் மறுகட்டமைப்பு பணிகளுக்காக 3 சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் கூறினார் .
குறிப்பாக நாகை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள் கோயில் நிலங்களாக இருப்பதால், இந்து சமய அறநிலையத்துறையிடம் பேசிய பிறகு, இப்பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறினார்.
மேலும், கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர், பிரதமரிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.