பல திருப்பங்களுக்குப் பிறகு ஒரு வழியாக அதிமுகவின் செயற்குழு - பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. பொதுக்குழு கூட்டம் நடப்பதை தடுக்க இறுதிவரை முயன்று வந்தது ஓபிஎஸ் தரப்பு. ஆனால் நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக இல்லாத நிலையில், ஒரே ஆறுதலாக ஏற்கனவே பட்டியலிடப்பட்ட தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களுக்கு அனுமதியில்லை என்ற தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு அமைந்தது. இந்நிலையில் இன்று கூட்டத்துக்கு ஓபிஎஸ் வந்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு முன்பே வந்துவிட்டாலும் கூட ஓபிஎஸ்ஸை யாரும் வரவேற்கவில்லை. அவருக்கு முன்பு வந்த அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம், மேடையில் ஏற அவருக்கு எதிராக கடுமையாக கோஷம் எழுப்பி அவரும் ஜே.சி.டி.பிரபாகரன் இருவரும் இறங்கும் சூழலை உறுப்பினர்கள் ஏற்படுத்தினர். பின்னர் வந்த எடப்பாடிக்கு அமோக வரவேற்பு இருந்தது. 'தலைவர், எடப்படியார்' என கோஷம் எழுந்தது.
அவர் மேடையில் ஏறியதும் பின்னர் பன்னீர்செல்வம் மேடையேற, முக்கிய நிர்வாகிகள் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. அவரோ புன்னகையுடன் சுற்றி இருப்பவர்களை பார்த்து வணக்கம் வைக்க, கடைசி வரை கூடவே இருந்துவிட்டு, திடீரென எடப்பாடி பக்கம் தாவிய மைத்ரேயன் பதில் வணக்கம் வைத்தார். பின்னர் ஓபிஎஸ் அமர, கூட்டம் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடக்கும் என்பதை ஓபிஎஸ் முன்மொழிய இபிஎஸ் வழிமொழிவார் என வைகை செல்வன் அறிவித்தார். ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லும்போதெல்லாம் எதிர்ப்பு கோஷம் எழுந்தது.
வளர்மதி வரவேற்புரை ஆற்ற வந்தார். ஒருங்கிணைப்பாளர் என்றோ பெயர் சொல்லியோ ஓபிஎஸ்ஸை குறிப்பிடாமல் தவிர்த்த வளர்மதி, எடப்பாடியை குறிப்பிட்டு வரவேற்றதோடு 'ஒரு தலைவன் இருக்கின்றான், அவன் சீக்கிரம் வருவான்' என்று பாடி கொந்தளித்தார். திடீரென மைக்கை பிடித்த சி.வி.சண்முகம், "அத்தனை தீர்மானங்களையும் இந்தப் பொதுக்குழு புறக்கணிக்கிறது" என்று ஆவேசமாக அறிவித்தார். முன்பு கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, பிறகு தீபாவுடன் இணைந்து செயல்பட்டு, பிறகு ஓ.பி.எஸ் ஆதரவாளராக உள்ளே வந்த முனுசாமியும் எடப்பாடிக்கு ஆதரவாக, "பொதுக்குழு மற்ற தீர்மானங்களை நிராகரிக்கிறது" என்று கூறினார்.
இப்படி தான் மேடையில் இருக்கும்போதே, சுற்றி அனைத்தும் எதிராக நடக்க இறுக்கமாக அமர்ந்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.