தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காமராஜர் சிலை பகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நேற்று (28-01-24) நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “கட்சி தொடங்கியது முதல் எப்போது யாருடனும் சமரசமும் இல்லை, கூட்டணியும் இல்லை. வெற்றி பெற்றாலும், தோற்றாலும் தனித்து தான் போட்டியிடும் என்று வரலாறு பேசும். நாம் தமிழர் கட்சிக்கு கூடும் கூட்டத்தை கண்டு மற்ற கட்சிகள் கலக்கம் கொள்கின்றனர். அதிமுக, திமுக தலைவர்கள் தமிழர்கள் கிடையாது. நாம் தமிழர் கட்சியைத் தான் மக்கள் தமிழர்களாக பார்க்கின்றனர். நாம் தமிழர் கட்சி செய்வது புரட்சி. திமுக, அதிமுக கட்சிகள் 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு குச்சியாக கூட இருக்காது.
ஒத்தையடி பாதையில் செல்லும் என்னை, 8 வழிச் சாலையில் அழைத்துச் செல்வது திமுக, அதிமுக தான். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியில் தமிழர்கள் இல்லை என வருத்தம் இனி தேவையில்லை. நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் அந்த அணியில் விளையாடும் 11 பேரும் தமிழர்களாகத் தான் இருப்பார்கள். நானும் வந்து விளையாடுவேன்.” என்று கூறினார்.