தங்க தமிழ்செல்வன் தலைமையில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா தேனி அருகே உள்ள வீரபாண்டியில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இங்கு வந்து சேர்ந்து இருக்கக்கூடிய தங்க தமிழ்ச்செல்வனை மட்டுமல்ல, உங்களை மட்டுமல்ல உண்மையாக அ.தி.மு.க.விற்காக இன்றைக்கும் உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த உண்மை விசுவாசிகள் தொண்டர்கள் அங்கு இருப்பது நியாயமல்ல உங்களுடைய இயக்கம் உங்களின் தாய்க்கழகம் திராவிட இயக்கமாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் தான் நான் அவர்களையும் வருக – வருக - வருக என வரவேற்க விரும்புகின்றேன். இந்தக் கூட்டத்தின் மூலமாக அவர்களையும் அழைக்க நான் விரும்புகின்றேன் என்றார்.
இதற்கு சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளித்து பேசுகையில், நாங்கள் சொல்லுகிறோம். உண்மையான அண்ணா தலைமையில் உள்ள திமுக தொண்டர்கள் அத்தனை பேரும் அதிமுகவில் வந்து இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பம் இருக்கிறது. எனவே அண்ணா தலைமையில் இருந்த திமுகவில் பணியாற்றிய, அண்ணா தலைமையை ஏற்றுக்கொண்ட திமுக தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் அதிமுகவுக்கு வர வேண்டும். அதிமுக தொண்டர்கள் ஒருவரும் அங்கே போகமாட்டார்கள். தங்க தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி சென்றதால் எல்லோரும் போய்விடமாட்டார்கள்.
டெல்லிக்கு 37 எம்.பி.க்கள் போகிறோம். பார்லிமெண்டையே முடக்கிவிடுவோம். மோடியை தடுத்துவிடுவோம். இந்த ஆட்சியை உண்டு இல்லை என ஆக்கிடுவோம் என்றனர். மோடி நினைத்தால் திமுக பஸ்பம் ஆகிவிடும். நாங்கள் நினைத்தால் திமுக கட்சியே இருக்காது. அந்த அளவுக்கு வலு இருக்கிறது. இந்த நாட்டினுடைய பிரதமரை முன்மொழியக்கூடிய இடத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். முன்மொழிந்தார். ஜனாதிபதியிடத்தில் பிரதமர் வேட்பாளர் யார் என்று பட்டியல் கொடுத்ததில் ஒருவராக சென்றவர் எடப்பாடி பழனிசாமி. இவ்வாறு பேசினார்.