கடலூரில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி அரசியல் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்போது தமிழகத்தில் போதைப் பொருட்கள் உள்ளதாக போராட்டம் செய்கிறார். திமுகவின் நிதிநிலை அறிக்கையை தமிழகத்தில் அனைத்து மக்களும் வரவேற்றுள்ளனர். இந்திய அளவில் பாராட்டுகின்றனர். இந்திய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியின் போது, குஜராத் மாநிலத்தில் அதானி துறைமுகத்தில் 3,300 கிலோ போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதை கண்டித்தெல்லாம் அவர் போராட்டம் நடத்தவில்லை. போதைப் பொருளை இந்தியா முழுவதும் சப்ளை செய்வது பாஜகவினர்தான். அதிமுக ஆட்சியில் முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், ஆணையர் ஜார்ஜ், அமைச்சராக இருந்த விஜய பாஸ்கர், ரமணா உள்ளிட்டவர்கள் மீது குட்கா வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ளது. இவர்கள் மீது அப்போது கட்சி ரீதியாக எடப்பாடி பழனிசாமி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஒருவர் செய்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் அதிமுக ஆட்சி காலத்தில் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையை வேடிக்கை பார்த்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் எந்த குற்றத்தையும் சொல்ல முடியாத நிலையில், எடப்பாடி பழனிசாமி இப்போது போதைப் பொருள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஐடி துறையில் பணியாற்றுபவர்களுக்கு தான் அதிக அளவில் போதைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்துகிறார். இது ஐடி துறையில் உள்ளவர்கள் அனைவரையும் அசிங்கப்படுத்தும் வகையில் உள்ளது. தமிழகத்திலிருந்து தான் உலகம் முழுவதும் ஐடி துறையில் அதிகமானோர் பணியாற்றி வருகிறார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தேர்தலின்போது 570 கோடி ரூபாய் கண்டெய்னரில் பறிமுதல் செய்யப்பட்டு சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து திமுக தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் கூட்டணியை பிளவுபடுத்த அனைத்து வேலைகளையும் அதிமுகவினர் செய்து வருகின்றனர். இது 2019ல் கூடிய கூட்டணி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிற்கு மோடி முனிசிபாலிட்டி எலக்சனுக்கு வருவது போல் வந்து செல்கிறார். அவருக்கு சூடு சொரணை இருந்தால் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்பதை கூற வேண்டும். அப்பொழுதுதான் அவர் ஒரு அரசியல்வாதி. என்.எல்.சி., அணு உலை குறித்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதற்கு திமுக நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றார்.