காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தனின் 91வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "ராகுல் காந்தி இங்கிலாந்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஜனநாயகம் பற்றி பேசுகையில் இந்திய நாடாளுமன்றத்தைப் பற்றி பேசினாரே தவிர, ஜனநாயகம் தவறு என்று பேசவில்லை. மோடிக்கு எதிராக ஒருவர் கருத்து கூறினால் அது இந்தியாவிற்கு எதிராகச் சொல்லப்பட்ட கருத்து என்று பாஜகவினர் சொல்கின்றனர். ஆனால், மோடி ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிக்கிறார். ஜனநாயகத்தின் குரல்வளையை பாஜக நெரிக்கிறது. நாடாளுமன்றத்தை முடக்குவதே பாஜக தான். நாடாளுமன்றத்தில் ஒரு தரப்பினரைப் பேசவே விட மாட்டோம் என்பது நியாயமா. எங்களுடைய கோரிக்கை எல்லாம் ஜனநாயகத்தைப் பற்றி பேச அனுமதிக்க வேண்டும் என்பது மட்டுமே.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டை நினைவூட்டும் வகையில் ஈரோட்டிலிருந்து வைக்கம் நோக்கி நடைப்பயணத்தை வரும் 28 ஆம் தேதி மேற்கொள்ள உள்ளோம். இந்த நடைப்பயணமானது தமிழ்நாடு மற்றும் கேரள காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற உள்ளது" என்றார்.