நேற்று பிரதமர் கலந்துகொண்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்ட முதல்வர் நீட், ஜி.எஸ்டி, கச்சத்தீவு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேசியிருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வர் மேடையில் பேசியது அரசியல் நாடகம் என விமர்சித்துப் பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று தற்பொழுது தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை பேசுகையில், ''திராவிட மாயை புத்தகத்தை எடுத்துப் பார்த்தால் தெரியும் சமூகத்தின் பெயரை சொல்லி சுரேஷ்ராஜன் என்பவர் எப்படி திட்டினார், அதற்கு என்ன நடந்தது என ஒரு பத்திரமே வாசிக்க ஆரம்பிக்கலாம். இதையெல்லாம் வைத்துக்கொண்டு சமூகநீதி கொண்ட பொருளாதார வளர்ச்சி என முதல்வர் பேசியிருப்பது எள்ளி நகையாடும் வகையில் உள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி மேடையில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், இந்நாள் மத்திய அமைச்சருமான எல்.முருகன் அமர்ந்திருந்தார்.
சமுக நீதியின் இலக்கணமான எல்.முருகன் அங்கே அமர்ந்திருந்தார். ஏழையெனும் ஏழையான அருந்ததியர் சமுதாயத்திலிருந்து தனது கடின முயற்சியால் மேலே வந்து, இன்று மோடி அவரது கேபினட்டில் முக்கிய அந்தஸ்தை கொடுத்து வைத்துள்ளார். அதனால்தான் மோடி நேற்று சொன்னார், உங்கள் மண்ணினை சேர்ந்த முருகன் கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் பாரம்பரிய உடையுடன் ரெட் கார்ப்பெட்டில் நடந்தார் என்று. அதையெல்லாம் மறந்துவிட்டு தமிழக முதல்வர் பேசிய சமூக நீதி என்னவென்று புரியவில்லை. ஆனால் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் பேசியது கட்சி கூட்டத்தில் பேசியது போல் இருந்தது'' என்றார்.