ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன.
அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இருவரும் மாறி மாறி ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர் தனித்துப் போட்டியிட இருப்பதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
பாஜகவின் தலைவர் அண்ணாமலை அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ''இப்பொழுது நடக்கின்ற தேர்தல் மோடிக்கான தேர்தல் அல்ல. மோடி பிரதமராக நன்றாக வேலை பார்த்தாரா என்பதை நிரூபிப்பதற்கான தேர்தல் அல்ல. இதில் பாஜக தெளிவாக இருக்கிறது. எங்கள் தேர்தல் எது என்பது எங்களுக்கு தெரியும். எந்த தேர்தல் பாஜக கட்சிக்கான பலப்பரீட்சை தேர்தல் என்பது எங்களுக்கு தெரியும். 2024 பாராளுமன்றத் தேர்தல் எங்கள் தேர்தல். அது எங்களுக்கான பலப்பரீட்சை; மோடியின் 10 வருட ஆட்சியை மக்கள் எடை போடும் தேர்தல். அதற்கு நாங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இடைத்தேர்தலில் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது'' என்றார்.
அண்ணாமலையின் கருத்து குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றால், பாஜகவிற்கு பலம் இல்லை என்பதுதான் உண்மை. நீங்கள் மேலே அதிகாரத்தில் இருப்பதால் ஊடகங்களை எல்லாம் வைத்துக்கொண்டு வளர்கிறார் வளர்கிறார் என்று சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே பாஜக வளர்த்திருந்தால் என்னை போல் தனியாக நின்று போராட வேண்டியதுதானே.
அண்ணாமலையால் எந்த முடிவும் எடுக்க முடியாது. நான் சொல்வதைப் போல் 'நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்; நாம் தமிழர் கட்சி சார்பாக பெண் வேட்பாளர் தேர்வு செய்கிறேன்; இந்த தேதியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்துகிறோம்' என்று முடிவு எடுக்க முடியுமா அண்ணாமலையால். அவர்களுடைய முதலாளி வேறு இடத்தில் இருக்கிறார்கள். மோடியும் அமித்ஷாவும் முடிவு பண்ணுவார்கள். அவர்கள் சொல்வதைத்தான் இவர் கேட்க முடியும். அவர்கள் ஏவுகின்ற வேலையை செய்கின்ற ஒரு வேலையாள் இவர், அவ்வளவுதான்'' என்றார்.