சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் செயல்படும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து, அங்கு அனாதையாக இறப்பவர்களின் இறுதி சடங்குகளை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தீஸ்கரின் ராய்ப்பூர் பகுதியில் செயல்பட்டுவரும் புனியாட் பெட்டியன் என்ற அறக்கட்டளையில் உள்ள பெண்கள் இணைந்து இந்த பணிகளை செய்து வருகின்றனர். ராய்ப்பூர் பகுதியில் அனாதையாக இறந்து, மருத்துவமனையிலிருந்து உடலை வாங்க யாரும் இல்லாத ஆதரவற்றவர்கள் ஆகியோரின் இறுதி சடங்குகள் முழுவதையும் இவர்களே செய்கின்றனர்.
இதுபற்றி கூறிய அந்த அமைப்பின் தலைவர் நிம்மி, "நாங்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே இந்த அமைப்பை ஆரம்பித்தோம். அப்போதுதான் தங்கள் இறுதி சடங்குகளைச் செய்ய கூட யாரும் இல்லாத பலரும், அனாதை பிணங்களாக விடப்படுவதை கண்டோம். அம்மாதிரியான மக்களுக்குத்தான் எங்கள் உதவி மிகவும் தேவை என்பதை நாங்கள் உணர்ந்தோம். இறந்தவர்களை முறையாக தகனம் செய்து அவர்களுக்கான இறுதி அஞ்சலியை செய்வதை மிகப்பெரிய விஷயமாக நாங்கள் கருதுகிறோம்" என கூறியுள்ளார்.
இந்த அமைப்பின் இம்முயற்சிக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.