பி.எம். கேர்ஸ் நிதி குறித்து சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் காலையில் மாநிலங்களவையும், மதியம் மக்களவையும் கூடி கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், கரோனா தடுப்பு மற்றும் பி.எம் கேர்ஸ் குறித்து கேள்வி எழுப்பினார். அவரது அந்த உரையில், "என்னுடைய தாயும், என் தம்பியும் கரோனா பாதித்து ஐசியுவில் இருக்கிறார்கள். எனவே கரோனாவின் பயங்கரம் என்னவென்று என் அனுபவம் எனக்கு கற்று தந்துள்ளது.
பாஜக எம்.பி. வினய் சகஸ்ரபுத்தே அன்று கேள்வி எழுப்பினார். மகாராஷ்ட்ரா அரசு கோவிட்-19-ஐ கையாளுவது பற்றி விமர்சித்தார். ஆனால் நெருக்கடியான பகுதியான தாராவி உட்பட பலபகுதிகளில் கரோனா பரவல் அபாயத்தை தடுத்திருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி வகுத்த விதிமுறைகளை மகாராஷ்ட்ரா அரசு கடைப்பிடித்து வருகிறது.
பிபிஇ கவச உடைகள், உபகரணங்கள், முகக்கவசங்கள் மற்றும் பிற கரோனா தடுப்பு உத்திகளுக்கான நிதியை மகாராஷ்ட்ராவுக்கு வழங்குவதை மத்திய அரசு செப்.1 முதல் நிறுத்தியது. இதனால் மகாராஷ்ட்ர அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.50 கோடி செலவாகிறது. மாநிலங்களுக்கு உதவுவதற்கு இல்லாமல் வேறு எதற்காக பிஎம் கேர்ஸ்?" எனத் தெரிவித்தார்.