நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் எம்.பிக்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்று, நேற்று நடைபெற்றது. தனியார் அமைப்பால் நடத்தப்பட்ட இந்த விழாவில் கலந்துகொண்ட இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சிறப்பாக செயல்பட்ட எம்.பிகளுக்கு விருது வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்தியாவில் ரிமோட் வோட்டிங் முறை குறித்த திட்டம் தயாராகி வருவதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர், இந்திய தேர்தல் ஆணையம் இந்தாண்டின் தொடக்கத்தில் ஐ.ஐ.டி சென்னை மற்றும் இதர ஐ.ஐ.டிக்கள், சிறந்த கல்விநிறுவனங்களை சேர்ந்த தொழிற்நுட்ப வல்லுனர்களின் ஆலோசனையுடன் ரிமோட் வோட்டிங் தொடர்பான ஆய்வு திட்டத்தை தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த முறைக்கு வடிவம் கொடுக்க ஒரு குழு கடுமையாக உழைத்து வருகிறது. ரிமோட் வோட்டிங் 2024 மக்களவைத் தேர்தலில் பயன்பாட்டிற்கு வரலாம். இந்த திட்டத்திற்கான தொடக்க கட்ட சோதனை, இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் நடைபெறும் என கூறியுள்ளார்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதை வரவேற்றுள்ள சுனில் அரோரா, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் திட்டம், அடுத்த ஓராண்டிற்குள் அமல்படுத்தப்படலாம் என தெரிவித்தார். இந்தநிகழ்வில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் இணை தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, ரிமோட் வோட்டிங் என்பது வீட்டிலிருந்தே இணையம் மூலமாக வாக்களிப்பது இல்லையென்றும், தொலைதூர நகரங்களில் இருப்பவர்கள், அந்த நகரங்களில் அமைக்கப்படும் சிறப்பு மையங்களில் சென்று வாக்குகளை செலுத்தவேண்டும் என்றும் விளக்கமளித்துள்ளார்.