இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் பாஜக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மைத்தேயி சமூக மக்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேறி இருக்கும் நிலையில், அவர்களை எஸ்டி பட்டியலில் சேர்ப்பது ஏற்கனவே நலிவடைந்து இருக்கும் பழங்குடியின மக்களை மேலும் பாதிக்கும் எனும் கருத்து அப்பகுதியில் பரவலாக மேலெழுந்தது. மேலும் மைத்தேயி மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கினால் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டுப் பலன்கள் குறைவதோடு பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலமும் படிப்படியாக ஆக்கிரமிக்கப்படும் எனப் பழங்குடியின மக்கள் கவலை தெரிவித்தனர். எனவே, பழங்குடி சமூகமாக ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து மைத்தேயி சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூரில் பழங்குடியின மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் இருதரப்புக்கும் இடையேயான கலவரமாக மாறியது. இதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மணிப்பூரே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த கலவரத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு தொடர் அமைதி காத்து வருகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டம் மூலம் கலவரத்தைத் தடுப்பது குறித்து விவாதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். மேலும் பிரதமர் மோடி ஜூன் 18 ஆம் தேதி தனது 102வது மன் கீ பாத் வானொலி உரையில் கடைசி வரை மணிப்பூர் வன்முறை குறித்து எந்தவொரு கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. இது குறித்து பல்வேறு தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலக் கலவரம் குறித்துப் பேச 10 எதிர்க்கட்சிகள் சார்பில் கடிதம் எழுதப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தில், ‘மே 3 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மத்திய அமைச்சர் அமித்ஷா பல முயற்சிகள் எடுத்த பிறகும் கலவரம் ஓயவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு பாஜகவின் பிரித்தாளும் கொள்கையே காரணம். மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தான் இந்த கலவரத்திற்கு காரணம். இதற்கு நேரம் ஒதுக்காமல் மோடி அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகளுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுவதாக உள்ளது’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் கலவரம் தொடர்பாக வரும் 24 ஆம் தேதி அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் நாளை மறுநாள் மாலை நடைபெற உள்ளது. மணிப்பூர் கலவரத்திற்கு பிறகு நடைபெறும் முதல் அனைத்துக் கட்சிக் கூட்டம் இதுவாகும்.
இந்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்த அறிவிப்பு பற்றி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், “கடந்த 50 நாட்களாக மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது குறித்து பிரதமர் அமைதியாக இருக்கிறார். தற்போது பிரதமர் நாட்டிலேயே இல்லாத நேரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே பிரதமருக்கு இந்த கூட்டம் முக்கியமில்லை என்பது தெளிவாக தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.