புதுச்சேரியில் காலியாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே வேட்பாளரைத் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது. இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்த பா.ஜ.க.வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பா.ஜ.க.வுக்கு ஒதுக்கும்படி கோரினர்.
இந்த நிலையில், பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று (21/09/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "புதுச்சேரியில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு எஸ்.செல்வகணபதி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் போட்டியின்றித் தேர்வாக உள்ளார்.
புதுச்சேரியில் முந்தைய ஆட்சியின் போது, பா.ஜ.க.வின் நியமன சட்டமன்ற உறுப்பினராக எஸ்.செல்வகணபதி பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.