நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை காரணமாக நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக காவலர்கள் சாலைகளில் நின்று ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த தீவிரமாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை கண்காணிக்கும் பணியில் இருந்த காவலர் ஒருவர் முட்டையை திருடிய வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முட்டை வியாபாரி ஒருவர் முட்டையுடன் அவரது வாகனத்தை சாலையில் நிறுத்தி விட்டுச் சென்ற நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் பிரீட் பால் சிங் வாகனங்களை ஒழுங்கு படுத்துவது போல் நடித்துக்கொண்டே முட்டை வாகனத்தில் இருந்த முட்டைகளை திருடி பாக்கெட்டில் வைத்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.