ரயிலில் பயணம் செய்யும்போதே அழகுசாதனம், வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் சமயலறை உபகரணங்கள் ஆகியபொருட்களை வாங்கிக்கொள்ளும்படி புதிய திட்டத்தை இந்திய ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல் கட்டமாக மும்பை பிரிவு மேற்கு இரயில்வே, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. மேலும் குறிப்பாக 16 விரைவு இரயிலில் மட்டுமே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலமாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விற்பனை நடைப்பெறும் என்றும், ஒரு ஒப்பந்தத்தின் கால அளவு ஐந்து வருடங்கள் என்றும், முதல் ஐந்து வருடத்தின் ஒப்பந்தத் தொகை 3.5 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விற்பனை நேரம் காலை 8 மணி முதல் இரவு 9 மணிவரை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.