2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.இதில் குற்றவாளி ராம் சிங் கடந்த 2013ஆம் ஆண்டு சிறையில் தற்கொலை செய்துக்கொண்டார். மற்றொரு குற்றவாளி சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து மீதம் உள்ள அக்ஷ்ய், முகேஸ், பவான், வினய் சர்மா நான்கு குற்றவாளிகளுக்கும் 2017 ஆம் ஆண்டு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மரண தண்டனையை ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் இந்த தேதிக்கு முன்னதாக குற்றவாளிகள் கருணை மனு மற்றும் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வழக்கில் ஏற்கனவே நான்கு பேரின் கருணை மனுவும் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீதிபதி குற்றவாளிகளுக்கான தண்டனை உத்தரவை அறிவிக்கும் சில நிமிடங்களுக்கு முன்பாக நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் தாயார் நீதிமன்றத்தில் நிர்பயாவின் தாயாரிடம் தனது மகனை மன்னித்து விடுமாறு கண்ணீர் விட்டு அழுது கெஞ்சியுள்ளார். அப்போது நிர்பயாவின் தாயார் 'எனக்கும் ஒரு மகள் இருந்தாள், ஆனால் அவளுக்கு நேர்ந்த கதி என்ன என்று உங்களுக்கு தெரியும். அந்த சம்பவத்தை என்னால் எப்படி மறக்க முடியும் என்று அவர் கூறியது கூறியதும் நீதிமன்றத்தில் இதை கவனித்த அனைவரும் கண்ணீர் விட்டு சோகத்தில் இருந்தனர்.
இந்த உரையாடலை நீதிபதியும் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது நீதிபதியிடம் சென்ற குற்றவாளியின் தாயார் 'என் மகனை தயவு செய்து மன்னித்து விடுங்கள், என் மகனுக்காக உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன் என்று கூற, அதற்கு நீதிபதி இந்த விஷயத்தில் கருணை காட்ட முடியாது என்று மறுத்துவிட்டு நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். குற்றவாளி முகேஷின் தாயார் நீதிபதியிடமும் நிர்பயாவின் தாயிடமும் கெஞ்சிய சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.