தனது வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு ஏ.சி போடுவதற்காக மின்சாரம் திருடிய நபருக்கு ஏழு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தொடர்ந்து மின்சாரம் திருடப்படுவதாக குடியிருப்பு வாசிகளுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து மின்வாரிய அதிகாரிகளிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், உடனடியாக அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த குடியிருப்பில் வசித்து வரும் அமீன் என்பவர், கட்டிடத்தின் மின் இணைப்பு பெட்டியிலிருந்து 34 ஆயிரத்து 465 யூனிட் மின்சாரத்தை இதுவரை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது, தனது வீட்டில் வளர்க்கும் மூன்று நாய்களுக்கு ஏ.சி வசதி செய்து தருவதற்காக மின்சாரம் திருடியதாகத் தெரிவித்துள்ளார்.
நாய்களுக்காகத் தனது வீட்டில் 24 மணிநேரமும் அவர் ஏ.சி ஓடும்படி செய்துள்ளார். இதற்குத் தேவையான மின்சாரத்தை அவர் திருடியுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்சாரம் திருடியதை அமீன் ஒப்புக்கொண்ட நிலையில், அவர் மின்சாரக்கட்டணம் மற்றும் அபராதம் ஆகியவற்றுடன் மொத்தம் ரூ.7 லட்சத்து 22 ஆயிரம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.