பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது பகுதி கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பானது. இந்த 100வது சிறப்புப் பகுதியை பொதுமக்கள் அனைவரும் கேட்பதற்காக மத்திய அரசும் பாஜகவும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்திருந்தன.
இதனிடையே முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய செவிலியர் கல்வி நிறுவனங்களுக்கு பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கட்டாயம் கேட்க வேண்டும் என மாணவர்களுக்குத் தெரிவித்திருந்தது. மேலும், பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை மாணவிகள் கட்டாயம் கேட்க வேண்டும் என்றும், இந்த நிகழ்வு வல்லுநர்கள், அறிஞர்களை அழைத்து வந்து நடத்தும் கவுரவ விரிவுரையின் ஒரு பகுதி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய செவிலியர் கல்வி நிறுவனத்தின் 36 மாணவிகளை பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்காததற்காக ஒரு வாரத்திற்கு விடுதியில் இருந்து வெளியே செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
இது பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், மேற்கு வங்க நாடாளுமன்ற எம்.பி மஹூவா கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியை நான் இதுவரை கேட்டதே இல்லை. ஒருமுறை கூட கேட்கவுமில்லை. இனி கேட்கப் போவதுமில்லை. அதனால் எனக்கும் தண்டனை வழங்கப்படுமா? ஒரு வாரத்திற்கு நான் என் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்படுமா? இப்போது மிகவும் கவலையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.