Skip to main content

ஜாபர் சாதிக் வழக்கு; என்.ஐ.ஏ. அதிரடி முடிவு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Jaffer Sadiq Case; N.I.A. Action

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க. வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது.

இதனையடுத்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். வழக்கு விசாரணை தொடர்பாகத் தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகின்றார்.

அதனைத் தொடர்ந்து, ஜாபர் சாதிக் மீது சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இத்தகைய சூழலில் ஜாஃபர் சாதிக்கின் நண்பர் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சதா என்பவரை இன்று (13.03.2024) கைது செய்து அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், பணப் பரிவர்த்தனைகள், வங்கிக் கணக்கு விவரங்களை மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளிடம் இருந்து டெல்லி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் தீவிரவாத அமைப்புகளுக்குச் சென்றுள்ளதா என்று விசாரிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.