சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் உள்ளே செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை நிறைவேற்ற ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒப்புக்கொண்டது. இதனை எதிர்த்துக் கேரளத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் ஜனவரி 1-ம் தேதி காசர்கோடில் இருந்து திருவனந்தபுரம் வரை 640 கி.மீ. தூரத்துக்கு அரசுக்கு ஆதரவாக உள்ள பெண்களை கொண்டு மனித சுவர் அமைக்கப்படும் என்றும் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். இதுகுறித்துப் பேசிய பாஜக தலைவர் எம்.டி.ரமேஷ், கம்யூனிஸ்டின் இந்த திட்டத்தை பா.ஜ.க கண்டிப்பாக முறியடிக்கும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அமைக்கும் இந்த சுவர்களை, பக்தர்களே இடிப்பார்கள். நாத்திக பெண்களின் சுவருக்கு பெண் பக்தர்களே தடையாக இருப்பார்கள் என அவர் கூறினார். மேலும் சபரிமலையில் போடப்பட்டுள்ள தடை உத்தரவுகளை நீக்கும் வரை கேரள தலைமைச் செயலகத்திற்கு முன்னால் பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் கால வரையற்ற உண்ணாவிரதம் இருப்பார் எனவும் அறிவித்தார்.