முன்னாள் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தனர். சுஷ்மா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா செய்தியாளர்களை சந்தித்து, சுஷ்மா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார். அதனை தொடர்ந்து பேசிய ஜே.பி. நட்டா பொதுமக்களின் அஞ்சலிக்காக சுஷ்மா உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள் மற்றும் பாஜக கட்சியினரின் அஞ்சலிக்காக இன்று மதியம் 12.00 மணிக்கு சுஷ்மா உடல் பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்படும். அதன் பிறகு மாலை 03.00 மணிக்கு டெல்லி லோதி சாலையில் உள்ள தகனத்தில் முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என தெரிவித்துள்ளார். சுஷ்மா சுவராஜின் உடலுக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக கட்சியின் மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.