சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இன்று தொடங்கியுள்ளன. சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 223 பேர் வேட்பாளராகக் களத்தில் உள்ளனர். 20 தொகுதிகளில் சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மிஞ்சியுள்ள 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் சுமார் 60,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய முதல்கட்டத் தேர்தல் 20 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தேர்தல் நடைபெறும் முந்தைய நாளான நேற்று (06-11-23) வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலில் தேர்தல் அதிகாரிகள் உள்பட 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் ஏற்கனவே அதிகப்படியான சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் வாக்குப் பதிவானது நடைபெற்றது. இதையடுத்து, அங்கு சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் அழைப்பு விடுத்திருக்கின்றன. எனவே, அங்கு பதற்றம் நிறைந்த அந்த தொகுதிகளில் 3 அடுக்கு போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறும் காங்கர் மாவட்டத்தின் அந்தகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளுக்குத் தேர்தல் அதிகாரிகள் நேற்று (06-11-23) கார்களில் சென்று கொண்டிருந்தனர். அவர்களின் பாதுகாப்புக்காக எல்லை பாதுகாப்புப் படை போலீஸார் அவர்களுடன் சென்றனர். இதையடுத்து, அவர்கள் அங்குள்ள சோட்டேபெத்தியா என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது சாலைக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில் தேர்தல் அதிகாரிகள் சென்ற ஒரு கார் சிக்கியது. இந்த வெடிகுண்டு சம்பவத்தால் தேர்தல் அதிகாரி 2 பேரும், பாதுகாப்புப் படை போலீஸார் ஒருவரும் பலத்த காயமடைந்தனர். இதில் அதிர்ச்சியடைந்த உடன் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அதே நேரம், இன்று (07-11-23) சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டம் தொண்டமார்கா பகுதியில் குண்டு வெடித்துள்ளது. இதில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் இந்த சூழலில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.