உலகை அச்சுறுத்தி வரும் கரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இந்தியாவிலும் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி, தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிலருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுகுறித்து விளக்கமளித்த மருத்துவ நிபுணர்கள், “கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக்கொண்டால்தான் கரோனாவிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்” எனத் தெரிவித்தனர். இந்நிலையில் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் போட்டுக்கொண்ட மருத்துவ தம்பதியினருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் பெலா டேவ். இவரது கணவர் திலீப் டேவ், நோயியல் நிபுணராவார். சுகாதாரப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இருவரும் கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்கனவே செலுத்திக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் மருத்துவத் துறையில் இருக்கும் இருவரும், வேலை நிமித்தமாக கரோனா பரிசோதனை செய்துகொண்டனர். அப்போது இருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. பெரிய அளவில் அறிகுறி எதுவும் இல்லையென்பதால் இருவரும் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் குஜராத் பிரிவு உறுப்பினர் கூறுகையில், “தடுப்பூசி எதுவும் 100 சதவீத செயல்திறனைக் கோர முடியாது. சில தடுப்பூசிகள் 70 சதவீதம் செயல்படும் என்றும், சில தடுப்பூசிகள் 81 சதவீதம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இறப்பு விகிதத்தைக் குறைக்க தடுப்பூசி அவசியம்” எனத் தெரிவித்துள்ள்ளார். இந்தியாவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்டவர்களுக்கும் கரோனா உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.