மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்தக் கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர்கள் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதே சமயம், அந்த மாநிலத்தில் வன்முறை குறைகிறது என்று மாநில அரசு அவ்வப்போது கூறி வந்தாலும், அங்கு சில பகுதிகளில் வன்முறை நடந்த வண்ணம் தான் இருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவின் இறையாண்மையை பின்பற்றவில்லை என்று கூறி மணிப்பூரை சேர்ந்த 4 மைத்தேயி போராளி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் விடுதலை ராணுவம் (PLA) என்ற அமைப்பும், அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணி (RPF), ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF), மணிப்பூர் மக்கள் ராணுவம் (MPA) ஆகிய 4 அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் மைத்தேயி மக்கள் குழுவுக்கு ஆதரவாக உள்ளதாக குக்கி தரப்பினர் புகார் கூறிய நிலையில், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.