மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் மூன்று கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் பஞ்சாப் ஹோஷியார்பூர் தொகுதி எம்.பி யான பாஜக வின் விஜய் சாம்ப்லா மத்திய இணை அமைச்சராக இருக்கும் இவர் பாஜக குறித்த சில விமர்சனங்களை வைத்து வந்தார். இந்நிலையில் இந்த முறை மீண்டும் அதே தொகுதியில் சீட் கேட்ட அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்த சவுக்கிதாரை நீக்கிய அவர் நேற்று பாஜக வுக்கு எதிரான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், "பாரதிய ஜனதா கட்சி பசுவதை செய்துள்ளது. இதனால் நான் மிகுந்த கவலையடைந்துள்ளேன். என் மேல் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. என் மேல் என்ன தவறு என்பதை பாஜக தான் கூறவேண்டும். எனது தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நான் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளேன். என்னுடைய தொகுதியில் விமானநிலையம், மேம்படுத்தப்பட்ட சாலை வசதி, புதிய ரயில்கள் என என் தொகுதியை மேம்படுத்தினேன். இதையெல்லாம் தவறு என்று நீங்கள் சொன்னால், இந்தத் தவறை மீண்டும் செய்யாதீர்கள் என்று எனது வருங்கால சந்ததிகளுக்குச் நான் சொல்வேன்" என கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.