புதுச்சேரி மாநிலத்தில் நான்காவது நாளாக தொடர்ந்து மின்துறை ஊழியர்களின் போராட்டத்தால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (01/10/2022) இரவு சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால், பொதுமக்கள் சாலைகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்ட நிலையில், நிலைமை சீரானது.
மின்சார விநியோகம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், "மின் விநியோகம் இல்லாத பகுதிகளில் மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலைமையை சமாளிக்க இரண்டு கம்பெனி துணை ராணுவப் படையினர் வரவுள்ளனர். மின் விநியோகம் வழங்கவுள்ள இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். வில்லியனூர், பர்கூர் உள்ளிட்டப் பகுதிகளில் மின் வயர்களைத் துண்டித்த ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய மின்துறை அதிகாரிகள் 24 பேர் வந்துள்ளனர்; அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.