ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட மறைந்த முதல்வர் கலைஞரின் உடல் மாலை 4 மணிக்கு மேல் மெரினாவை நோக்கி இறுதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. 6.30 மணியளவில் அண்ணாசதுக்கத்திற்குள் உடல் கொண்டு வரப்பட்டது. கலைஞரின் உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கும் நிகழ்வு தொடங்கியது. முப்படை தளபதிகளின் மரியாதைக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் கலைஞர் உடலின் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி அகற்றப்பட்டு ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர், மு.க.அழகிரி, ராஜாத்திஅம்மாள், செல்வி, துர்கா, கனிமொழி, தமிழரசு, துரைதயாநிதி, அருள்நிதி உள்ளிட்ட குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்தினர். இறுதியாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இறுதி மரியாதை செலுத்தினார்.
இறுதி மரியாதைக்குப்பிறகு 6.50 மணிக்கு கலைஞரின் உடல் ''ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’’ என்று பொறிக்கப்பட்ட சந்தைனப்பேழைக்குள் எடுத்து வைக்கப்பட்டது.
பின்னர் சந்தனப்பேழைக்குள் குடும்பத்தினர் ஒவ்வொருவராக வந்து உப்பு போட்டுச்சென்றனர். அப்போது ஸ்டாலின் கதறி அழுதார்.
கலைஞரின் உடல் வைக்கப்பட்ட சந்தனப்பேழையை மூடிய போது ஸ்டாலின், துர்க்கா ஸ்டாலின், அழகிரி, செல்வி, தமிழரசு உள்ளிட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். தொடர்ந்து அழுது கொண்டே இருந்த ஸ்டாலினை துர்க்கா தேற்றினார்.
இறுதி மரியாதை முடிந்து இரவு 7 மணிக்கு 9 ராணுவ வீரர்கள் 3 முறை வானத்தை நோக்கி சுட்டனர். குடும்பத்தினர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக வந்து சந்தனப்பேழை இறக்கப்பட்ட குழிக்குள் கண்ணீருடன் மண் அள்ளித்தூவ, 27 குண்டுகள் முழங்க அரசு மரியாதை உடன் கலைஞரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.