அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 11 வது முறையாக நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் இருந்து வந்தார். அதே சமயம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தை நாடினர். இந்த சூழலில் உடல்நலக்குறைவு காரணமாக புழல் சிறையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு பின்னர் அங்கிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூடுதல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஒமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றுடன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைய இருந்த நிலையில் ஒமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இருந்து காணொளி வாயிலாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை டிசம்பர் 4 ஆம் தேதி வரை 11 வது முறையாக நீடித்து சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் 28 ஆம் தேதி வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.