யூ-ட்யூப், அறிமுகமானது 2005ஆம் ஆண்டில் என்றாலும் இந்தியாவில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது ஜியோவின் வருகைக்குபிறகுதான். தொடங்கப்பட்ட ஒரு ஆண்டிலேயே யூ-ட்யூப் நிறுவனம் கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. 2010க்குப் பிறகு இந்தியாவில் மெல்ல பரவத்தொடங்கிய யூ-ட்யூப், 2016இல் ஜியோவின் வருகைக்குப் பிறகு காட்டுத்தீ போல பரவியது. அதுவரை எழுத்து வடிவில் படித்த வந்த அனைத்தையும் வீடியோ வடிவில் பார்க்கத்தொடங்கினர் இந்தியர்கள். யூ-ட்யூப் சேனல் நடத்துவது என்பது ஒரு தொழில் வாய்ப்பாகவும் உருவானது.
தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்த சினிமாவையும் தொலைக்காட்சி சேனல்களையும் நம்பி, துரத்தி, வாய்ப்புக்காகக் காத்திருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள், யூ-ட்யூபில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி லட்சக்கணக்கான ரசிகர்களை சென்றடைந்தனர். அதன் மூலம் நல்ல வருமானத்தையும் ஈட்டினர். இந்த நிலவரத்தை உணர்ந்த திரைப்படத்துறையும் யூ-ட்யூப் பக்கம் வந்தது. பாடல்கள், ட்ரெயிலர்கள் யூ-ட்யூபில் வெளியிடப்பட்டன. இன்று அது, திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் வருமானத்தைத் தரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
திரைப்படங்களுக்கு போட்டியாக 90களில் பெரிய ஊடகமாக உருவெடுத்தது தொலைக்காட்சி. முதலில் வாரத் தொடர்களாக வந்தவை மக்களின் வரவேற்பைப் பார்த்து மெகா சீரியல்களாக தினமும் ஒளிபரப்பாகின. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய தமிழ் மெகா சீரியல்களுக்கு அச்சுறுத்தலாக டப்பிங் சீரியல்கள் இடையில் வந்தன. சிறிது இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் சீரியல்கள் வெற்றிநடை போடுகின்றன. மெகா சீரியல்களை வெறித்தனமாகப் பார்ப்போரை கிண்டல் செய்வதும் தமிழகத்தில் உண்டு. தொலைக்காட்சித்துறையும் மெதுவாக யூ-ட்யூபை முக்கியமாகக் கருதத் தொடங்கியது. மெகா சீரியல்கள் யூ-ட்யூபிலும் வரத் தொடங்கின. ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் தங்களுக்கென தனி யூ-ட்யூப் சேனல் தொடங்கி அதிலும் சீரியல்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினர். இன்று யூ-ட்யூப் மற்றும் பிற ஆன்லைன் வீடியோ ஒளிபரப்பு தளங்கள் தொலைக்காட்சி சேனல்களுக்கு பெரிய போட்டியாக உருவெடுத்துள்ளன.
கூகுள் நிறுவனத்தின் சார்பில் அதன் முக்கிய பங்களிப்பாளர்களுடனான சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. கூகுள் நிறுவனத்தின் இந்திய, தென்னிந்திய அளவிலான முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற அந்த சந்திப்பில் அவர்கள் பல தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர். அந்தத் தகவலின்படி தமிழ் யூ-ட்யூப் பயனாளர்கள் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சிகளில் மெகா சீரியல்கள் முன்னிலையில் உள்ளன. அவர்கள் பகிர்ந்த வரிசைப்படி சன் டிவியில் ஒளிபரப்பாகும் விகடனின் நாயகி சீரியல் முதலிடத்தில் உள்ளது. ரோஜா, அழகு, பிரியமானவள், கல்யாண வீடு ஆகிய சீரியல்களும் முன்னணியில் உள்ளன. பல ஆண்டுகளாக யூ-ட்யூப் நிகழ்ச்சிகள் உருவாக்கி புகழ் பெற்ற பல சேனல்களை எளிதில் முந்தியிருக்கின்றன இந்த சீரியல்கள். உலகமெங்கும் சீரியல்கள் விரும்பிப்பார்க்கப்பட்டாலும் தமிழின் இந்த சீரியல் விருப்பம் அவர்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தொலைக்காட்சி தொடர்கள் போக சமையல் நிகழ்ச்சிகளும் திரைப்பட விமர்சனங்களும் அரசியல் நிகழ்வுகளை கேலி செய்யும் காமெடி நிகழ்ச்சிகளும் தமிழர்களால் விரும்பிப் பார்க்கப்படுவதாக அவர்கள் பகிர்ந்தனர்.