அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த ஆளுநர் உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல். ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பது குறித்து முதல்வரே முடிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல். ரவி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ‘ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை’ எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் நக்கீரனுக்கு அளித்த பேட்டி, “ஒருவர் அமைச்சராக தொடர்வதும் அல்லது அமைச்சரவையில் இருந்து விலக்குவதும் முதல்வரின் முடிவுதான் என்பதை அரசியல் அமைப்பு சட்டம் உறுதி செய்திருந்தாலும் கூட, ஆளுநர் அவர் மீது ஒரு சர்ச்சையை உருவாக்கினார். அதாவது, அவர் அமைச்சராக தொடர முடியாது என்பது போன்று அவருக்கு இல்லாத அதிகாரத்தை தனக்கு இருப்பதாக நினைத்துக்கொண்டு ஆளுநர் செய்த காரியத்தை சென்னை உயர் நீதிமன்றம் மறுத்தது. அதனை இன்று உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜனநாயக ஆட்சி அமைப்பில், முதல்வரை சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் யார் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய முழு அதிகாரமும் முதலமைச்சருக்குத்தான் இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.
ஆளுநர்களுக்கான அதிகாரங்களை எத்தனை முறை உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டிய பிறகும், தங்களுக்கு அதிகாரங்கள் இருப்பதை போல தலையிடுவதை தவறு என உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகத் தெளிவாக இன்றும் சுட்டிக் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. இது ஜனநாயகத்திற்கு கிடைத்திருக்க கூடிய வெற்றியாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாத்திருக்கிறது என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தில் இது மக்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரம். அரசியலமைப்பு சட்டம் என்பதைவிட இதனை நான் ஜனநாயகத்தில் உண்மையான அதிகாரம் மக்களுக்கு இருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்றே பார்க்கிறேன்.
இதற்கு முன்னால் உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்புகளிலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்பிலும், ‘ஆளுநர்கள் நீண்ட காலம் மசோதாக்களை நிலுவையில் வைப்பதைவிட, நீங்கள் உங்களுக்கான அதிகாரத்தை தெரிந்துகொண்டு நடந்துகொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் எங்களை நாடி உச்சநீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்’ எனும் மிகக் கடுமையான வார்த்தைகளைக் கூட அவர் சொல்லியிருந்தார். இது ஜனநாயகத்தில் மக்களுக்கு கிடைத்த வெற்றி என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.